பெண் தொழில்முனைவோர்களுக்கு சிறப்புக் கடன்கள்

பெண் தொழில்முனைவோர்களுக்கு சாதகமான பல வகையான கடன் திட்டங்கள் உள்ளன. அவர்களுக்கு பல வங்கிகளில் சிறப்பு கடன் திட்டங்களும் உள்ளன.

வட்டி சலுகை

பெண் தொழில்முனைவோர்கள் இதுபோன்ற சிறப்புத் திட்டங்களில் கடன் பெறும்போது வட்டி சலுகை கிடைக்கும். பொதுவான தொழில்கடன்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை வட்டியில் சலுகை கிடைக்கும். உதாரணத்துக்கு ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் எஸ்எம்இ பிரிவில் ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான கடனுக்கு 10.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதே வங்கியில் பொதுப்பிரிவினருக்கு 11.95 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் வாங்கும் கடனுக்கு 1.25 சதவீதம் வட்டி குறைவாகும்.
அதேபோல எஸ்பிஐ வங்கியில் பெண் தொழில்முனைவோர்கள், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் கடனுக்கு 0.50 சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படுகிறது. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்கள் வாங்கும் கடனுக்கு பரிசீலனை கட்டணம் கிடையாது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ. 5 லட்சத்துக்கு மேல் வாங்கும் ஒவ்வொரு லட்ச ரூபாய் கடனுக்கும் 250 ரூபாய் மட்டுமே பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால் பொதுப்பிரிவினருக்கு வாங்கும் கடனுக்கு ஏற்ப 0.5 சதவீதம் பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படும். பெண்கள் ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் கடனுக்குதான் பரிசீலனைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பொதுப்பிரிவில் கடன் வாங்கினாலே பரிசீலனை கட்டணம் உண்டு.

நிபந்தனைகள்

பெண்களுக்கு என வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. உதாரணத்துக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியாவை எடுத்துக்கொண்டால் தொழிலின் உரிமை மற்றும் நிர்வாகம் பெண்களிடம் இருந்தால் மட்டுமே சலுகையில் கடன் கிடைக்கும். ஒரு வேளை கூட்டு நிறுவனமாக இருந்தால் பாதிக்கு மேல் பெண்களின் பங்கு இருக்கவேண்டும். கடன் வாங்கும் போது பிணை சொத்து காண்பிப்பதிலும் பெண்களுக்கு சில சிறப்பு சலுகைகள் உள்ளன. எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் 5 லட்ச ரூபாய்க்குள் கடன் தொகை இருக்கும்பட்சத்தில் பிணையாக எந்த சொத்துகளையும் சமர்பிக்க தேவையில்லை.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வாங்கும் கடனுக்கு ஏற்ப 20 சதவீதம் பிணை சொத்துகளை சமர்பிக்க வேண்டி இருக்கும். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்குள் வாங்கும் கடனுக்கு 5 சதவீதமும், ரூ.10 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் கடனுக்கு 15 சதவீத சொத்துகளை பிணையாக சமர்பிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

பெண்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதே வங்கியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
சில சமயங்களில் சிறப்பு திட்டங்களில் கடன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு தொழில் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இந்த வகையான சிறப்பு திட்டங்களில் கடன் கிடைப்பது சிரமமாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் சொத்தின் மீது அல்லது தங்கத்தை வைத்து கடன் வாங்கலாம். ஆனால் இதுபோன்ற இதர வழிகளில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை விடவும், வட்டி விகிதம் மற்றும் பரிசீலனை கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

ஆதாரம் : தி இந்து

Comments

Popular posts from this blog

சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி?

தொழில்முனைவோர் பண்புகள் என்றால் என்ன்?

கருப்பட்டி தயாரிப்பது எப்படி